கேப்டன் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்தது எப்படி?

ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும், கோபக்கார இளைஞராகவும், அதிரடி ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்திய படங்களிலும் நடித்த புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். சிறுவயதில் இருந்தே திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு எளிதாக அமைந்ததால், தான் பார்த்த திரைப்படங்கள் குறித்து சக நண்பர்களிடம் ஒவ்வொரு காட்சியாக விவரித்துப் பேசி மகிழ்வார். குறிப்பாக, எம்.ஜி.ஆர் நடித்த ஆக்‌ஷன் படங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. அப்படங்களை விஜயகாந்த் பலமுறை பார்த்து ரசித்துள்ளார். சினிமா மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வம் காரணமாக, அவரது நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்தியது. நண்பர்களுடன் இணைந்து திரைப்படங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது மகன் சரியாகப் படிக்கவில்லை என்றறிந்த அவரது தந்தை, கீரைத்துறையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை நன்கு கவனித்துக்கொள்ளும்படி விஜயகாந்தை கேட்டுக்கொண்டார்.

விஜயகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேசி பொழுதுபோக்கும் அந்தக் கட்டிடத்துக்கு மேற்புறம் சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது. மதுரை மாவட்டம் முழுவதும் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனமான அதன் உரிமையாளர் முகமது மர்சுக் என்பவர் விஜயகாந்துக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற படத்தை வாங்கி மதுரை ஏரியாவில் வெளியிட்டபோது, அந்த மாவட்டம் முழுவதும் அப்படம் வெளியான திரையரங்குகளுக்கு அந்த ஆட்டை அழைத்துச் சென்று விளம்பரம் செய்ய விஜயகாந்த் உதவிகரமாக இருந்தார். இந்நிலையில், தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கு இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாகவும் சினிமாவில் நடிப்பது என்று முடிவு செய்து, சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்கிடம் தனது ஆர்வத்தை தெரிவித்தார், விஜயகாந்த். உடனே அவரை சென்னைக்கு வரவழைத்து, இயக்குனர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்திய சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக், ‘இவர் என் தம்பி மாதிரி’ என்று சொல்லி, விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது பி.மாதவன், ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற படத்தை இயக்குவதற்கான ஆயத்தப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்படத்தை மதுரை ஏரியாவுக்கு சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் வாங்கியிருந்தார். அப்போது ரஜினிகாந்தைப் போன்ற ஹேர்ஸ்டைலுடன் காணப்பட்ட விஜயகாந்தைப் பார்த்தவுடன் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டது. உடனே அப்படத்தில் ரஜினிகாந்துக்கு தம்பியாக நடிக்க வைத்து விடலாம் என்று தெரிவித்தார். பிறகு சென்னை சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தங்கிய விஜயகாந்த், ஏராளமான திரைப்பட கம்பெனிகளுக்கு நேரில் சென்று வாய்ப்பு தேடினார். அப்போது சுதாகர், ராதிகா நடிப்பில் ‘இனிக்கும் இளமை’ என்ற படத்துக்கான படப்பிடிப்பு பணிகளை இயக்குனர் எம்.ஏ.காஜா தொடங்கினார். அவர் தனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஜயகாந்துக்காக சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் கேட்டுக்கொண்டார். உடனே விஜயகாந்தை நேரில் வரவழைத்த எம்.ஏ.காஜா, தான் இயக்கிய ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், கடந்த 1979ல் திரைக்கு வந்த `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜயகாந்த், பிறகு ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜின் ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிப் படமாக அமைந்தது என்று சொன்னால், அது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம்தான். இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முதலில் பிரபுவிடம் கதை சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகரன், ‘இது ஆக்‌ஷன் கதையாக இருக்கிறதே’ என்று பிரபு தயங்கியதால், உடனடியாக நிறைய புதுமுகங்களை வரவழைத்து ஆடிசன் நடத்தினார். ஆனால், ஒருவர் கூட அந்தக் கேரக்டரில் நடிக்க தேர்வாகவில்லை. ஒருநாள் தனது உதவி இயக்குனர்களுடன் வடபழநி வாஹினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் தீர்க்கமான நெருப்புக் கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகரனை மிகவும் கவர்ந்தது. உடனே அவரை விரட்டிப் பிடிக்கச் சொல்லி தனது உதவியாளர்களை அனுப்பி வைத்தார். எப்படியோ அவர்கள் விஜயகாந்தை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர்.

‘நாங்கள் ஒரு படம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதில் நீங்கள் நடிக்கிறீர்களா?’ என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் கேட்க, ‘நான் சினிமாவில் நடிப்பதற்காக தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தற்போது ஒரு படத்தில் நடிக்கிறேன்’ என்று சொல்லி, தனது பெயர் ‘விஜயராஜ்’ என்று சொன்னார். அதற்குப் பிறகு தொடங்கப்பட்டதுதான் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம். தமிழில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த அதை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கினார். பிறகு அப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவானது. ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை தொடர்ந்து ‘சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்த ராகம்’ போன்ற வெற்றிப் படங்களை தொடர்ச்சியாக வழங்கிய விஜயகாந்த், அப்போது தமிழின் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். தொடர்ந்து ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்னக்கவுண்டர்’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்ற படங்கள் விஜயகாந்தின் திரைப்பயணத்தில் வெற்றிப் படங்களாக அமைந்தன. பல நடிகர்களுக்கு அவர்களின் 100வது படம் வெற்றிபெறுவது இல்லை. அதாவது, 100வது படம் என்று குறிப்பிட்டாலே அது ஓடாது என்ற சென்டிமெண்ட் உண்டு. ஆனால், விஜயகாந்த் விஷயத்தில் அது தலைகீழாகி விட்டது. அவர் நடித்த 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படம், 100க்கும் மேற்பட்ட நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

நடிகர் சங்க கடனை அடைத்தார்:


153க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், கடந்த 1985ல் மட்டும் ஒரே ஆண்டில் 17 படங்களில் நடித்து திரைத்துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தார். ‘செந்தூரப்பூவே’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது, கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். கடந்த 1999ல் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஜயகாந்த், பல வருடங்களாக அடைக்க முடியாமல் இருந்த தென்னிந்திய நடிகர் சங்க கடனை சிங்கப்பூர், மலேசியா ஆகிய தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அவ்வளவு தொகை கடனை வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்து, மிகப்பெரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். கடந்த 2002ல் காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து தமிழ் நடிகர், நடிகைகளையும் ஒன்றிணைத்து, `நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து நெய்வேலியில் நடத்தினார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *