கும்பகோணம்: "இந்தப் பதவியிலிருக்க திமுக-தான் காரணம்!” – காங்கிரஸ் மேயருடன், திமுக-வினர் வாக்குவாதம்

கும்பகோணம் மாநகராட்சியில் தி.மு.க-வைச் சேர்ந்த துணை மேயரை, செயல் மேயர் என தி.மு.க கவுன்சிலர்கள் குறிப்பிட்ட போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் மாமன்றக் கூட்டத்தில் அது குறித்து கேள்வி எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது துணை மேயர், `நீங்க ஜெயிச்சதுக்கும், மேயர் பதவியில் இருக்க தி.மு.க-தான் காரணம்’ என மேயரை பார்த்து கண்கள் கலங்க கோபமாக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழழகன், சரவணன்

கும்பகோணம் மாநகராட்சி மேயரான சரவணன் கட்சியைச் சேர்ந்தவர். துணை மேயர் தமிழழகன் தி.மு.க-வைச் சேர்ந்தவர். மாநகராட்சி தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டு வார்டில் அந்தக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 17-வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் ஆட்டோ டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கூட்டணியில் கும்பகோணம் மேயர் பதவியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினார். இதனை சற்று எதிர்பார்க்கும் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், வேறு வழியில்லாமல் கட்சித் தலைமையின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.

செயல் மேயர் என அச்சிடப்பட்ட போஸ்டர்

இதையடுத்து ஆட்டோ டிரைவரான சரவணன் மேயராக பொறுப்பேற்றார். இதனை உண்மையான ஜனநாயகம் என அப்போது பலரும் வரவேற்றனர். ஆட்டோ டிரைவர் மேயரானது பேசுபொருளாக மாறியது. தொடக்கத்தில் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில்கூட தி.மு.க-வினரால் மேயர் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. பின்னர் மேயர் சரவணன் தனது பங்குக்கு மேயருக்கான செயலை தன்னிச்சையாக செய்யத் தொடங்கினார், தி.மு.க துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் எரிச்சல் அடைந்ததாகக் கூறினார்.

இந்த நிலையில் மேயர் , துணை மேயருக்கு இடையே பனிப்போர் தொடங்கியது. இதையடுத்து சமீபத்தில் துணை மேயர் தமிழழகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது கும்பகோணம் மாநகராட்சியின் செயல் மேயர் என தமிழழகனை வாழ்த்தி தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டினர். கவுன்சிலர் ஒருவர் `செயல் தலைவரே, செயல் மேயரே!’ என போஸ்டர் அடித்திருக்கிறார்.

தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தமிழழகன் செல்லக்கூடிய நிகழ்ச்சிகளில் எல்லாம் செயல் மேயர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது மேயர் சரவணனை கோபமடையச் செய்திருக்கிறது. இந்த நிலையில், கும்பகோணம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் “மேயர் சரவணன் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நான், மேயர் பதவியில் இருக்கிறேன். ஆனால் நீங்கள் துணை மேயரை, செயல் மேயர் எனக் கூறுகிறீர்கள்… போஸ்டர் அடிக்கிறீர்கள்.

அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? அதற்கான அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது யார்?” எனக் கேள்வி எழுப்பினார். அதோடு, செயல் மேயர் என அச்சடிக்கப்பட்ட போஸ்டரையும் காட்டினார். இதனால் கோபமான தி.மு.க கவுன்சிலர்களான தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் மாமன்றத்துக்கு வெளியே நடக்கும் கட்சி விவகாரங்கள் குறித்து கட்சியினரால் ஒட்டப்படும் போஸ்டர்கள் குறித்து மேயர் எப்படி மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம் என கோஷமிட்டனர்.

மேயர் சரவணன் – தி.மு.க கவுன்சிலர்கள்

மேயர் இருக்கைக்கு முன்பு சென்று `செயல் மேயர்னு போட்டுக்கலாம்’ என ரகளை செய்தனர். `அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?’ என மேயர் கேட்க, `போடக்கூடாது என்பதற்கு சட்டம் இருக்கிறதா?’ என தி.மு.க கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய துணை மேயர் தமிழழகன், “எனக்குப் பதவி பெரிதல்ல, நான் பரம்பர்யமான குடும்பத்திலிருந்து வந்தவன்.

தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நானும் எங்க கட்சி கவுன்சிலர்களும் இருக்கிறோம். பதவியேற்ற தேதியை சொல்லி அன்றைக்கு உங்க கட்சி மாவட்டத் தலைவர் என்ன சொன்னார், போய் அவர்கிட்டேயே கேளுங்க” என மேயரைப் பார்த்து கோபமாகப் பேசினார்.

கண்கள் கலங்கிய துணை மேயர்

மேலும், “நீங்க ஜெயிச்சதுக்கும், இந்த சீட்டில் மேயர் பதவியில் இருப்பதற்கும் தி.மு.க-தான் காரணம். தலைவருக்காக எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன்” என கோபமாக பேசி முடித்தவர், கண் கலங்கிய நிலையில் அமர்ந்தார். கண்களில் வழிந்த கண்ணீரை கைகுட்டையில் துடைத்துக் கொண்டார். இதனால் கூச்சல் குழப்பத்துடன் கூட்டம் நிறைவடைந்ததுடன் கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *