கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது… பாதிரியாருக்கு வலைவீச்சு… சேகர்பாபு தகவல் – பின்னணி என்ன?

Tamil Nadu Latest: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பசுவபட்டி பிரிவை சேர்ந்த அர்ஜுனன் என்பவர் கடந்த மாதம் 17ஆம் தேதி தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது மகன் கோகுல் ஆகியோர் ஜெபம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துவர்கள் போராட்டம்

இதில் இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் ஈடுபட்ட சின்னசாமி மற்றும் அவரது மகன் கோகுல் உள்ளிட்ட நான்கு பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு கிறிஸ்துவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் தலைமையில் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

எதிர்த்து இந்து அமைப்பும் போராட்டம்

அமைப்பின் நிர்வாகி வழக்கறிஞர் சரவணன் சென்னிமலையை, கல்வாரி மலையாக மாற்றும் என பேசியதாக கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து இந்து அமைப்பினர் மற்றும் முருக பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியதால் அந்த 13ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் அவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலீசார் வழக்குப்பதிவு 

இந்து முன்னணி தலைவர் காட் ஈஸ்வரர் சுப்ரமணிய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கைது நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினர் தெரிவித்த நிலையில் சென்னிமலை போலீசார் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிறிஸ்துவ முன்னணி அமைப்புச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்.

நாளை மாலைக்குள்…

அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து இன்று (அக். 18) ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு,”சென்னி மலையை கல்வாரி மலையாக மாற்றும் என்ற விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் சரவணனை போலீசார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் நாளை மாலைக்குள் கைது செய்யும்” என தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *