கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;  சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு காணை, அம்மை நோய், நாய்க்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 2.80 லட்சம் பசு, காளைகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.

இவற்றிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 67 இடங்களில் மட்டுமே கால்நடை மருத்துவமனை உள்ளது. இதில், டாக்டர்கள், உதவி டாக்டர்களின்றி கால்நடைகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. குளிர் காலத்தில் பசுக்கள் பால் உற்பத்தி குறையாமல் இருக்க தேவையான சிகிச்சை, காணை, அம்மை நோய் பரவலை தடுக்க தேவையான தடுப்பூசி செலுத்துதல், ரோடுகளில் திரியும் நாய்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட அனைத்து கால்நடை துறை சார்ந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது, விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட வருவாய் தரக்கூடியது கால்நடை வளர்ப்பு. தற்போது காணை, அம்மை நோய் பாதிப்பால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போட முடியவில்லை. பெரும்பாலான கால்நடை மருந்தகங்கள் டாக்டர்களின்றி பூட்டியே கிடக்கின்றன. நடமாடும் கால்நடை ஆய்வாளர்களும் சரிவர கிராமங்களுக்கு வந்து சிகிச்சை அளிப்பதில்லை.

இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கலெக்டரிடம் புகார் அளித்துள்ளேன். கால்நடைத்துறை சிவகங்கை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) கார்த்திகேயன் கூறியதாவது, சிவகங்கை மட்டுமின்றி மாநில அளவில் கால்நடைத்துறை டாக்டர், உதவி டாக்டர் காலிபணியிடம் உள்ளது. அரசும், டாக்டர்களை தேர்வு செய்ய உள்ளது. உரிய டாக்டர்கள் வந்ததும், அனைத்து மருந்தகங்களிலும் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நடமாடும் கால்நடை ஆய்வாளரிடம் உரிய தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு போட்டுக்கொள்ளலாம், என்றார்.


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *