கலெக்டர் தலைமையிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொதிப்பு ; ஆக்கிரமிப்பு பிரச்னை அதிகம் என குமுறல்

மதுரை : மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. மேலுாரில் டங்ஸ்டன் ஆய்வு செய்யக்கூடாது; சேக்கிப்பட்டியில் கல்குவாரி அமைக்கக்கூடாது என கிராமத்தினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு சுப்புராஜ், துணை இயக்குநர் ராணி, மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வம் கலந்து கொண்டனர். மூத்த விவசாயி உத்தங்குடி ராஜமாணிக்கம் இறப்பிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மணவாளக்கண்ணன், நாட்டாப்பட்டி: டெல்டா மாவட்ட விவசாயிகளைப் போல மதுரை மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவைத்தொகுப்பு மானியம் வழங்க வேண்டும்.

நாகேந்திரன், சமயநல்லுார்: 2021ல் பருவமழை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

முத்துமீரான், பேரையூர்: விவசாயிகளுக்கு நிரந்தர சிறு, குறு விவசாய சான்று வழங்குவதற்கு முகாம் நடத்த வேண்டும்.

மூக்கன், உசிலம்பட்டி: கே.போத்தம்பட்டி கண்மாயை துார்வாரவேண்டும்.

பாண்டி, கொட்டக்குடி: கொட்டக்குடி பெரிய கண்மாய் கீழ் வாய்க்கால் பாலம் சேதமடைந்துள்ளது.

மூர்த்தி, பொன்னமங்கலம்: வைகை அணையிலிருந்து திருமங்கலம் விரிவாக்க கால்வாய் வழியாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

ராமச்சந்திரன், பொன்னமங்கலம்: மடை எண் 10 ல் பாலம் அமைத்து சொரிக்காம்பட்டி கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

தங்கராசு, செல்லம்பட்டி: செல்லப்பன்கோட்டை கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மணிகண்டன், விக்கிரமங்கலம்: சக்கரப்பநாயக்கனுார், விக்கிரமங்கலம் கிராம நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டும்.

அடைக்கலராஜ், கம்பூர்: முத்துவீரப்பன் பிள்ளை குளம், புதுக்குளம் கண்மாய்களின் மடைகளை சிமென்ட் மடைகளாக மாற்ற வேண்டும்.

நெடுஞ்சேரலாதன், ராஜாக்கூர்: உழவு செய்யும் வாகனங்கள் சென்று வரும் வகையில் நிரந்தரப் பாதை ஏற்படுத்த வேண்டும்.

தவிடன், அய்யனார்புரம்: விவசாய நிலத்தில் மயான குளியல் நீர்த்தொட்டியின் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

ராமன், உசிலம்பட்டி: திருமங்கலம் கீழ உரப்பனுார் பிட் 1 கிராமத்தில் செட்டிகுளம் முதல் பெருமாள்பட்டி கிராம இணைப்புசாலை செல்லம்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண் 257/3 ல் உள்ள ஒரு ஏக்கர் 69 சென்ட் நிலத்தை தனிநபர்கள் சட்டவிரோதமாக ஆக்கரமித்துள்ளனர். அதற்கு வி.ஏ.ஓ. மணிமேகலை துணைபோகிறார். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்சிணாமூர்த்தி, விராதனுார்: வெள்ளக்கல் கழிவுநீர் தேங்குவதால் குடிநீர் பாதிக்கப்படுகிறது. மீன்பிடி குத்தகை எடுத்தவர்கள் மடையை அடைப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.

அழகுசேர்வை, பனையூர்: பனையூர் – தெப்பக்குளம் செல்லும் 6 கி.மீ., நீள கால்வாய் கட்டப்பட்டு பத்தாண்டுகளாகியும் துார்வாரவில்லை.

சீத்தாராமன், வாடிப்பட்டி: கொப்பரை ஏலத்திற்கு நவம்பர் வரை அனுமதியிருந்தும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.

தெத்துார் மக்கள்: எங்கள் பகுதியில் பாதிபேருக்கு 2006 ல் கருணாநிதி பட்டா வழங்கினார். மீதிபேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

முன்னதாக ஒருபோக சாகுபடி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தான் தண்ணீர் திறக்க வேண்டும் என்று சொல்ல, அங்கு கொடுத்தால் 20 நாட்கள் கூட தண்ணீர் கிடைக்காது. பயிர்கள் வீணாகிவிடும் என்று இருபோக சாகுபடி விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். இன்னும் ஒருவாரம் வரை மழை கிடைப்பதை வைத்து முடிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் சங்கீதா கூறியதாவது: அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு துணைபோனதாக கூறப்படும் வி.ஏ.ஓ., மணிமேகலை நேரில் பார்த்து விளக்கம் சொல்ல வேண்டும். மேலுார் கொட்டாம்பட்டியில் மத்திய அரசு சார்பில் ஆய்வு நடக்கிறது. இது டங்ஸ்டன் ஆய்வு என்று நாங்கள் சொல்லவில்லை. யாரையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வழங்கவில்லை. சேக்கிப்பட்டி உட்பட கல்குவாரிகள் நடத்த 2021 ல் வழங்கப்பட்ட ஆணை உள்ளது. அதையே பின்பற்றுகிறோம். கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு வனத்துறை விலை நிர்ணயிக்க வேண்டும். டெல்டாவை போல மானியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு. பேரையூரில் சிறு குறு விவசாய சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். நெற்பயிருக்கான கடன் ஓராண்டாக்க முடிவு செய்யப்படும். தெத்துாரில் மீதமுள்ளோருக்கு பட்டா வழங்கும் திட்டம் இல்லை. பட்டா வழங்கமுடியாது என்றார்.

மாங்குளம் மலைச்சாமி கடந்தாண்டு நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டபோது, சராசரியை விட அவரது வயலில் மகசூல் அதிகமாக இருந்ததால் இழப்பீடு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த அவர் விவசாயிகளை வாழவிடுவதில்லை என்று கத்தியபடி தலையில் துண்டை போட்டு வெளியேறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *