கண்மாயில் நீர் தேங்காததால் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறும் அவலம் ஜம்புலிபுத்துார் கண்மாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துார் கண்மாயில் நீர் தேங்காததால் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. –

ஆண்டிபட்டி ஒன்றியம்,ஜம்புலிபுத்தூர் கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. 50 ஏக்கர் பரப்பிலான இக்கண்மாய் 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீர் நாகலாறு ஓடையில் இருந்து வரும் நீரை ஆசாரிபட்டி அருகே ஷட்டர் அமைத்து ரெங்கசமுத்திரம், ஜம்புலிப்புத்தூர் கண்மாய்களுக்கு குறிப்பிட்ட அளவில் பிரித்து அனுப்பப்படும். ஓடையின் குறைவான நீர் வரத்தால் கடந்த பல ஆண்டுகளாக கண்மாய்க்கு நீர் கிடைக்கவில்லை.

இதனால் நீர்த்தேக்க பகுதியில் சீமை கருவேல மரங்கள் புதர் போல் வளர்ந்துள்ளது. கண்மாய் கரைகளிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பல இடங்களில் கரை சேதமடைந்துள்ளது.

கடந்த காலங்களில் கண்மாயில் முழு அளவில் நீரைத்தேக்கி மடை மூலம் கால்வாய் வழியாக நீரைக் கொண்டு சென்று ஜம்புலிபுத்தூர், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் நேரடி பாசனம் செய்து வந்தனர். தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால் கண்மாய் நீர் செல்லும் கால்வாய் சுவடுகள் கூட தற்போது இல்லை. கடந்த பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் இப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தால் பலரும் விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றிவிட்டனர். கண்மாய் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

தடுப்பணைகளால் தடைபடும் நீர் வரத்து

நாகமணி, சீரங்காபுரம்:வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் நாகலாறு ஓடையில் பல இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டதால் கண்மாய்களுக்கு நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் சண்முகசுந்தரபுரம் அருகே சமீபத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு அதுவும் வீணாகி உள்ளது. கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் மட்டும் தற்போது தேங்குகிறது.

கண்மாய் நிரம்பிய பின் உபரியாக வரும் நீரை வெளியேற்ற கண்மாயின் வடக்கு பகுதியில் 20 அடி உயர கான்கிரீட் தடுப்புடன் நீர்வழியும் கலிங்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கண்மாயில் தேங்கிய நீர் கான்கிரீட் தடுப்பு வழியாக கசிந்து ஓடையில் வீணாகிறது. வீணாகும் நீரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை.

முல்லை பெரியாறு உபரி நீர் திட்டம் தேவை

முருகன், ஜம்புலிப்புத்தூர்:பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் இப் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கிறது. இறவை பாசன நிலங்கள் பல ஏக்கர் மானாவாரியாக மாறிவிட்டன. கண்மாயை தூர்வாரும் நடவடிக்கை இல்லை. கண்மாயின் கிழக்கு மடை சேதம் அடைந்து புதர் மண்டியுள்ளது.

பெரியாறு அணை உபரிநீரை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து கால்வாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தேக்க ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர்.

இத்திட்டம் நிறைவேறினால் ஜம்பலிபுத்தூர்கண்மாயில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி நிற்கும். கண்மாயில் நீர் தேங்கினால் ஜம்புலிபுத்தூர், அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், கோயில்பட்டி, ரங்க சமுத்திரம், சீரங்காபுரம், முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். விவசாயத்தை கைவிட்டு மாற்று தொழிலுக்காக வெளியூர் செல்லும் விவசாயிகளின் நிலைமாறும். ஆண்டு முழுவதும் கண்மாயில் நீர் தேங்கவும், விவசாயம் அதனை சார்ந்தகால்நடை வளர்ப்பு தொழில் மேம்படவும் நீர் பாசன துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *