கட்டா குஸ்தி கலக்கலா? சொதப்பலா?- சினிமா விமர்சனம் | Gatta Kusthi film review

கலை கலாச்சாரம்

பிபிசி-பிபிசி தமிழ்

மூலம் BBC News தமிழ்

|

புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 2, 2022, 20:56 [IST]

நடிகர்கள்: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணா, முனீஸ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்க்ஸ்லி; இசை: ஜஸ்டின் பிரபாகரன்; இயக்கம்: செல்லா அய்யாவு.

விஷ்ணு விஷாலும் ரெஜினா கசாந்த்ராவும் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவுதான் இந்தப் படத்துக்கு இயக்குநர். சிலுக்குவார்பட்டி சிங்கம் ஒரு கலகலப்பான திரைப்படம் என்பதால் இந்தப் படத்தின் மீதும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது.

கட்டா குஸ்தி பட விமர்சனம்

இந்தப் படத்தின் கதை இதுதான்: கேரள மாநிலம் பாலகாட்டைச் சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லக்ஷ்மி) குஸ்தி படங்களில் அதீத ஆர்வம் கொண்டவர்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.

இதனாலோ என்னவோ, அவருக்குத் திருமணமே ஆகாமல் இருக்கிறது.

மற்றொரு பக்கம் தனக்கு மனைவியாக வருபவருக்கு இடுப்பு வரை கூந்தல், தன்னை விடக் குறைந்த படிப்பு என பட்டியலுடன் காத்திருக்கிறான் வீரா (விஷ்ணு விஷால்).

பல்வேறு பொய்களைச் சொல்லி வீராவுக்கு கீர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஆனால், விரைவிலேயே உண்மை தெரிந்து விடுகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இந்த ஆண்டை கலகலப்பாக நிறைவு செய்ய ‘கட்டா குஸ்தி’ நல்ல சாய்ஸ் என பாசிட்டிவான விமர்சனத்தைக் கொடுத்துள்ளது தினமணி.

ஒரு சாதாரண கதை என்றாலும் அதில் கமர்சியல் படத்திற்கான எல்லா அம்சங்களும் அந்த அளவில் வைத்து சுவையான விருந்தாக பரிமாறி இருக்கும் இயக்குநர் என புகழ்ந்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் இணையதளம்.

ஆனால், வெகுஜன சினிமா பிரியர்களுக்கான அம்சங்கள் கொண்ட பிற்போக்குவாத கருத்துகளை உள்ளடக்கிய படம் இது என விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.

ஆண்டின் தொடக்கத்தில் எஃப்ஐஆர் திரைப்படத்தில் வெற்றியுடன் தொடங்கிய விஷ்ணுவிற்கு ஆண்டின் இறுதியில் வெற்றியுடன் நிறைவாக இருந்தது கட்டா குஸ்தி என முழுக்க முழுக்க பாராட்டியிருக்கிறார் தினமணி.

படத்தின் கரு பெண்ணின் சுதந்திரத்தை, அந்த சமூகத்தின் வலிகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் வித்தியாசமான முறையில் அதைக் காட்சிப்படுத்தியிருப்பது படத்துக்குக் கைகொடுத்துள்ளது.

“மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்ட போடனும். இங்க மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்ட போடனும்” போன்ற வசனங்கள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன.

கருணாஸின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தவர் பேசும் வசனங்கள் ஆண்களை சுடும்.

படத்தின் முதல் பாதி சிரிக்க வைத்து வெளியான இரண்டாம் பாதி சிரிப்புடன் கலந்து சீரியஸாகவும் சில விஷயங்களைப் பேசியுள்ளது.

ஆண், பெண் உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசியுள்ளது திரைப்படம்.

தெறிக்கும் காட்சிகளுக்கு பாராட்டு

காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க திரையரங்கில் மக்களுக்கு நல்ல எண்டர்டெயின்மென்ட் அமைந்த திரைப்படம்.

நாயகியாக வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் நாயகன் விஷ்ணு விஷாலின் நடிப்பு படத்திற்கு நன்றாக கைகொடுத்துள்ளன.

“தனது மனைவி தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என அவர் செய்யும் காரியங்களில் தொடங்கி தன் மனைவியாலேயே தனக்கு அவமானம் இருப்பதாகக் கருதுவது வரை விஷ்ணு விஷால் கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்” என பாராட்டியுள்ளது தினமணி நாளிதழின் இணையதளம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளமும் இந்தப் படத்தை முழுமையாக பாராட்டியுள்ளது.

“ஒரு சாதாரண கதை என்றாலும் அதில் கமர்சியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் அந்த அளவில் வைத்து சுவையான விருந்து பரிமாறி இருக்கிறார் இயக்குநர் செல்ல அய்யா.

படம் கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் சென்றாலும் இரண்டாம் பாதியில் வரும் பெண் உரிமைகளுக்கான வசனங்களும், காட்சிகளும் அப்ளாசை அள்ளுகிறது.

கட்டா குஸ்தி திரைப்படம் கலகலப்பாக இருந்தாலும் மிக பிற்போக்குத் தனமான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகச் சாடுகிறது இந்து தமிழ்த் திசையின் விமர்சனம்.

“கணவன் – மனைவி உறவை மையமாக கொண்டுள்ள படத்தின் முதல் பாதி பரவலான பார்வையாளர்களை கவரும் வகையில் வேகமெடுக்கிறது.

திருமணத்திற்காக கூறிய பொய்யை சமாளிக்க போராடும் நாயகி, மனைவியிடம் கெத்து காட்ட நாயகன் செய்யும் செயல்கள், ஆர்ப்பரிக்க வைக்கும் இடைவேளை என ‘கட்டா குஸ்தி’ முதல் ரவுண்டில் ஸ்கோர் செய்கிறது.

சில காட்சிகளில் இருந்து விலக இதுதான் காரணம்

இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்குப் பிறகு எளிதாகக் கணிக்கக் கூடிய, கிளிஷேவான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. தர்க்கப் பிழைகளுடன் கூடிய காட்சிகளும், ஒட்டாத சென்டிமென்டும் திரையிலிருந்து நம்மை விலக்கிவிடுகின்றன.

மேலும், பெண்கள் குறித்து படம் முழுவதும் பேசும் வசனம் அபத்தத்தின் உச்சம். படத்தின் மையக் காரணமே பிற்போக்கதனத்தையொட்டி இருப்பது, திரும்ப திரும்ப பெண்கள் குறித்து ஆண்கள் வகுப்பெடுப்பது, பெண்ணிடம் அடிவாங்கினால் அவமானம், கல்யாணத்துக்கு அப்றம் ஆண்கள் அடங்கி போகக்கூடாது என முழுக்க முழுக்க ஆணாதிக்க நெடி உச்சம்.

அதை இரண்டு மூன்று வசனங்கள் வழியாக பெண்களுக்காக பேசுகிறேன் என்ற பெயரில் க்ளைமாக்ஸில் கிளாஸ் எடுப்பது, நடுநடுவே சம்பிரதாயத்திற்காக சமன் செய்ய வைக்கப்பட்ட வசனங்களால் பலனில்லை.

படத்தின் பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும் 90 கால கட்ட சினிமாவுக்குள் பின்னோக்கி செல்கிறதா என்ற உணர்வு எழாமலில்லை.

அதேபோல படத்தின் தலைப்பான ‘கட்டா குஸ்தி’க்கு எந்த வகையிலும் நியாயம் சேர்க்காமல் அதை பெயரளவில் மட்டுமே தாங்கி நிற்கிறது படம்” என்கிறது இந்து தமிழ் திசை.

இந்தத் திரைப்படத்தின் உள்ளடக்கம் குறித்து ஒவ்வொரு இதழும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும் படத்தில் நடித்திருப்போரின் நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

கதைக்கு பலம் சேர்க்கும் துணை நடிகர்கள்

“தனக்கான முக்கியத்துவம் கொண்ட கதைகளை கிளறி தேர்ந்தெடுக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி சமரசமின்றி அதேமாதிரியான கதையில் இம்முறை குஸ்தி வீராங்கனையாக களமிறங்கியுள்ளார்.

கிராஃப் வெட்டி, சேலையை ஏற்றிக்கட்டி எதிரிகளை பந்தாடுவதாகட்டும், குஸ்தி போட்டிகளிலும், ஆக்ரோஷமான கண்பார்வையிலும், விளையாட்டு வீராங்கனைக்கான லுக்கிலும், அதேசமயம் கிராமத்து பெண்ணாகவும் இரு வேறு எல்லைகளில் நடிப்பில் உச்சம் தொடுகிறார்.

‘படிச்சவ அதிகாரம் பண்ணுவா… படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல; பையன்’ போன்ற பழமைவாத வசனங்களை பேசும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால்.

தனக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார். ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கருணாஸ் கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

தவிர முனிஸ்காந்த், காளிவெங்கட், ஹரீஷ் பேரடி துணை கதாபாத்திரங்களின் கதைக்கு பலம். ரெடின் கிங்க்ஸ் லீ தனக்கான ஸ்டைலில் சிரிக்கவைத்து தடம் பதிக்கிறார்” என்கிறது இந்து தமிழ் திசை.

“துணை கதாபாத்திரங்களாக வருபவர்கள் அனைவரும் சரியான தேர்வு. சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த், வழக்குரைஞர் காளி வெங்கட், மாமன் கருணாஸ் என ஒவ்வொருவரும் அளவான அதேசமயம் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கிங்ஸ்லீ ஆகியோரின் காமெடியெல்லாம் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

குறிப்பாக கணவன் குறித்து மனைவிகளும், மனைவி குறித்து கணவன்களும் பேசிக் கொள்ளும் இடம் இனி சமூக வலைதளங்களில் வைரலானாலும் ஆச்சரியப்படுவதில்லை. ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு பக்கபலமாக உள்ளன.

ஐஸ்வர்யா லக்ஷ்மியின் ஆக்ஷன் காட்சிகள் முன்பு கூறியதைப் போல ஆச்சரியம் கொள்ளத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது” என தினமணியும் அந்தப் படத்தில் நடித்துள்ள கலைஞர்களின் நடிப்பைப் புகழ்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், படத்தில் சில பிற்போக்கான கருத்துகள் இருந்தாலும் கலகலப்பான திரைப்படமாக கட்டா குஸ்தி வெளிவந்துள்ளது என்றே பெரும்பாலான ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பிபிசி தமிழ்

ஆங்கில சுருக்கம்

Gatta Kusthi Movie Review tamil விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *