எண்ணெய் கொப்புளங்கள் போல் வலியை ஏற்படுத்தும் ‘ஷிங்கிள்ஸ்’…யாருக்கு வரும்?

சமீப காலமாக செய்தித்தாள், ரேடியா, டிவி என அனைத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “ஷிங்கிள்ஸ்’ (Shingles) பாதிக்கலாம். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. ‘ஷிங்கிள்ஸ்’ என்றால் என்ன, அது பாதிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் உமாபதி.

“50 வயது கடந்தவர்களுக்கு ‘அக்கி’ என்ற சொல்லப்படும் சருமத்தில் உருவாகும் எரிச்சலுடன் கூடிய கொப்புளங்கள்தான் ‘ஷிங்கிள்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இது வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella zoster) என்ற வைரஸ் வகையினால் வரக்கூடிய நோய். வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை பெரும்பாலும் இந்தத் தொற்று பாதிக்கும்.

வயதாக ஆக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். ஷிங்கிள்ஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நரம்பியல் சார்ந்த வலி ஏற்படும். நெஞ்சுப்பகுதி, முதுகு, முகம், இடுப்பு மற்றும் கால் பகுதியில் இந்தக் கட்டி உருவாகலாம்.

பிற வைரல் தொற்றுகளைப் போலவே காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். மேலும் சருமத்தில் கொதிக்கும் எண்ணெய் தெளித்தால் ஏற்படுவதைப் போன்ற கொப்புளங்கள் ஏற்படும். இந்தக் கொப்புளங்களில் இருக்கும் நீர் மற்றவர் மீது பட்டால் அவர்களுக்கும் தொற்று பரவும். கொப்புளங்களின் மேல் தோல் ஆறிவிட்டால் பிறகு பரவாது.

கொப்புளங்கள் ஆறிய பின்னரும் சில நாள்களுக்கு வலி நீடித்துக் கொண்டே இருக்கும். இந்த வலியைத் தாங்க முடியாமல் தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்பட்டவர்கள் கூட உண்டு. அந்த அளவுக்கு தாங்க முடியாத வலியாக இருக்கும்.

இந்தக் கொப்புளங்கள் உருவானதும் ஊசி வைத்துக் குத்துவது போல் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவுக்கு வலி ஏற்படும். அம்மை நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஷிங்கிள்ஸ் தொற்று ஏற்பட அதிக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இந்தத் தொற்று ஒரு நபரிடம் 12 முதல் 14 நாள்கள் வரை நீடிக்கலாம். பிரச்னை தீவிரமடைந்தால் பார்வை இழப்பு ஏறப்படவும் வாய்ப்புள்ளது. ஷிங்கிள்ஸ் தொற்று ஏற்பட்டால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்.

தடுப்பூசி

இந்த வைரஸ் தொற்றுக்கு Shingrix என்ற தடுப்பூசி உள்ளது. இரண்டு தவணைகளாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசியை அனைவருமே எடுத்துக் கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி எடுத்து ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு தடுப்பூசியின் விலை சுமார் ரூபாய் 10,000 வரை இருக்கும். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு செய்யலாம்” என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *