உதயநிதி ஸ்டைலில் ‘இந்து’ மதத்தை விமர்சித்த அகிலேஷ் கட்சி மவுரியா- வடக்கு சாமியார்கள் ருத்ரதாண்டவம்!

ஹரித்வார்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பாணியில் இந்து மதத்தை மிக கடுமையாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா முகத்தில் கரியை பூசுவோம் என வட இந்திய சாமியார்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் சுவாமி பிரசாத் மவுரியா விரைவில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் எனவும் சாமியார்கள் சாபமிட்டுள்ளனர்.

சென்னை சனாதனத்தை ஒழிப்போம் மாநாட்டில் சனாதனம் என்பது கொரோனா, மலேரியா, காலரா போன்றது.. அதை ஒழித்துதான் ஆக வேண்டு என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசினார். ஆனால் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என பொய் பிரசாரம் செய்தனர் பாஜகவினர். பிரதமர் மோடியும் இதனையே முன்மொழிந்து மத்திய அமைச்சரவையை கூட்டி உதயநிதிக்கு கண்டனம் தெரிவிக்க உத்தரவிட்டார். இந்துமத சாமியார்கள் உதயநிதி தலைக்கு ரூ1 கோடி, ரூ10 கோடி என விலை வைத்தனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அமைச்சர் உதயநிதி போல, உபி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியாவும் இந்து மதம், சனாதனத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர். அவரையும் இந்து மத சாமியார்கள் கடுமையாக எச்சரித்து வந்தனர். இந்த நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா மீண்டும் இந்து மதத்தை விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமி பிரசாத் மவுரியா, இந்து மதம் என்பதே மோசடியானது- ஏமாற்று வேலை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூட இந்து மதம் என்பது ஒன்று இல்லை. அது ஒரு வாழ்வியல் முறைதான் என்கிறார். பிரதமர் மோடியும் இப்படிதான் கூறியிருக்கிறார் என பேசினார்.

அவ்வளவுதான்.. வட இந்திய சாமியார்கள், சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக வரிந்து கட்டி ருத்ரதாண்டவமாடுகின்றனர். நிர்வாண சாமியார்களின் அமைப்பான அகில் பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் ரவீந்திர பூரி மகாராஜ் என்பவர், சுவாமி பிரசாத் மவுரியா தமது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை பார்க்கும் போது முகத்தில் கரியை பூசிவிடுவோம் என எச்சரித்துள்ளார். மேலும் சுவாமி பிரசாத் மவுரியா எப்போது பார்த்தாலும் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறார். இந்துக்களை அவமதிப்பதை ஒருநாளும் பொறுக்க முடியாது. அவரது முகத்தில் கரியை பூசித்தான் ஆவோம் என்கிறார்.

மற்றொரு சாமியாரான மகா மண்டலேஸ்வர் ரூபேந்திர பிரகாஷ் மகாராஜ், சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இந்து மதத்துக்கு எதிரான வெளிநாட்டு சதிக்கு உடைந்தையாகிவிட்டார். இந்துக்கள் இதனை சகித்துக் கொள்ள முடியாது என்றார். இந்து ரக்‌ஷன சேனா தலைவர் மகா மண்டலேஸ்வர் பரபோதானந்த் மகாராஜ் கூறுகையில், அனேகமாக சுவாமி பிரசாத் மவுரியா விரைவில் தற்கொலை செய்து கொள்வார் என அஞ்சுகிறேன். இந்துக்களுக்கு எதிராக பேசினால் பிற மதத்தினர் ஓட்டு போடுவார்கள் என நினைக்கிறார் மவுரியா. மக்களை முட்டாளாக்குகிறார் மவுரியா என சாபமிட்டார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *