உதயநிதியை அடுத்த முதலமைச்சராக்கும் முயற்சி வெற்றி பெறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலர் எஸ்.ஆர். வெற்றிவேலின் மகள் திருமணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்வுடன் சேர்த்து, கூடுதலாக நூறு ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த ஜோடிகள் அனைவரது திருமணத்தையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’இன்று திருமணம் செய்துகொண்ட அனைத்து ஜோடிகளும் பல்லாண்டுகாலம் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். அதிமுக ஒரு குடும்பம் போன்றது. அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாக இருக்கிறது.
பாஜக கூட்டணியில் அதிமுக பிரிந்ததைப் பிடிக்காத திமுகவினர் அவதூறு பேசி வருகின்றனர். பாஜகவுக்கு அதிமுக பினாமி கிடையாது. மறைமுகமான உறவும் வைத்திருக்கவில்லை. நீட் தேர்வை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது உதய நிதியும் பேசி வருகின்றனர். ஆனால் ஒன்று, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் காலத்தில் காந்திச்செல்வன் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த சமயத்தில் தான் நீட் தேர்வுக்கு ஆன அச்சாரம் போடப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினர் கொண்டு வந்த திருமண உதவித் திட்டம், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், பிறந்த குழந்தைகளுக்கான பெட்டகம்,மானிய விலையில் பைக், சுய உதவிக்குழுவுக்கு சுழல் நிதி வழங்கப்படும் திட்டம் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள். தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு என்று மாற்றிவிட்டார்கள்.
திமுக ஊழல் செய்ய ஆட்சிக்கு வந்துள்ளார்கள். இதற்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். திமுக குடும்ப ஆட்சி செய்கிறது. திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களை மதிப்பது இல்லை. உதயநிதியை அடுத்த முதலமைச்சராக்க முனைப்பு காட்டுகின்றனர். அடுத்த தேர்தலில் அதிமுக நிச்சயம் வெல்லும்’என அவர் பேசினார்.