'இளைஞர்களுக்கு வழி விடுவோம்' – முரசொலி கடிதம் மூலமாக யாருக்கு அறிவுரை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்?

கடந்த 2007-ம் ஆண்டு முரசொலி நாளிதழில் இளைஞர்களுக்கு வழி விடுவோம் என்ற தலைப்பில் கருணாநிதி கட்டுரை எழுதினார். அந்த கடிதத்தினை தற்போது மீண்டும் முரசொலியில் வெளியிடப்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அந்த கடிதம் வெளியிடப்படவேண்டிய தேவை என்ன. அந்த கடிதத்தின் மூலம் முதல்வர் ஸ்டாலின் யாருக்கு என்ன செய்தி சொல்ல நினைக்கிறார்?கட்சி

கருணாநிதி- ஸ்டாலின்

திமுக-வினர் சிலர், இந்த மாதம் இளைஞரணி மாநாடு நடக்க இருப்பதால், அப்போது கலைஞர் கருணாநிதி இளைஞரணி குறித்து எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் மறுபடியும் வெளியிடப்படுகிறது. இதில் வேறு உள்நோக்கம் இல்லை என்கிறார்கள்.

எனினும் உள்விவகாரம் அறிந்த திமுகவின் மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம், “தளபதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த காலகட்டமும், தற்போது உதயநிதி அரசியலுக்கு வந்த காலகட்டமும் வெவ்வேறானவை. அப்போதிருந்த சூழலுக்கும், தற்போதைய நிலைக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. தளபதி அரசியல் களம் கண்ட நேரத்தில் அவருக்கு அழகிரி, கனிமொழி என்று பலமுனை போட்டிகள் இருந்தன. இவர்கள் அனைவரையும் எதிர்கொள்ளவேண்டிய தேவை இருந்தது.

அதேபோல, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவர் முன்னிலையிலிருந்தனர். அவர்களில் சிலர் ஸ்டாலினை ஆதரித்தாலும். இன்னும் சிலர் அழகிரி, கனிமொழி போன்றவர்களையும் ஆதரித்தார்கள். அந்த சூழல் முழுவதையும் மாற்றி, தானாக நம்பிக்கையுடையவர்களை ஆண்டுகள் பல செலவு செய்து சிறுக சிறுக சம்பாதித்தார் ஸ்டாலின். பலரின் நம்பிக்கையைப் பெற்று ஒவ்வொரு பொறுப்பாக முன்னேறி தலைமை பொறுப்புக்கு வந்தார். அதேசமயத்தில், கலைஞர் கருணாநிதியும் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால், அப்படியான எந்த போட்டியும் இப்போது உதயநிதிக்கு கிடையாது.

முதல்வர் ஸ்டாலின் – உதயநிதி

குடும்ப உறுப்பினர்கள் போட்டி இல்லை என்றாலும், ஒவ்வொரு பகுதிகளிலும் சீனியர் அமைச்சர்கள் தொடங்கி, கட்சி முன்னோடிகள் பலரும் இருக்கிறார்கள். அவர்கள் உதயநிதியைப் போற்றி புகழ்ந்தாலும், சின்னவர் என்று அழைத்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த தலைவரே என்று சொன்னாலும், இப்போது வந்த உதயநிதிக்கு மட்டும் பதவியா, எங்கள் வாரிசுகளுக்கு மட்டும் எதுவும் கொடுப்பதில்லையே என்ற புகைச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த விவகாரம் அனைத்தும் தலைமைக்கு தெரியாமல் இல்லை. என்ன இருந்தாலும், அனைத்து கட்சி சார்ந்த அரசியல் பிரச்னைகளைத் தாண்டிதானே அவர் இன்று தலைவர் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார். ‘இளைஞர்களுக்கு வழி விடுவோம்’ என்று சொல்வதன்மூலம் அடுத்த தலைமுறையினருக்கு வழி விடுங்கள் என்று சீனியர்களுக்கு செய்தி சொல்கிறார் முதல்வர் என்று தான் எடுத்துக்கொள்ள முடியும்” என்றார்கள் விரிவாக.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *