இந்தியா
ஓ-ஜாக்சன் சிங்
இட்டாநகர்: “எங்களுடன் இருப்பதோ இந்திய ராணுவம்.. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சீனா தான் பயப்பட வேண்டும்” என்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சீனா உடனான மோதலால் அருணாச்சலப் பிரதேசத்தில் போர் பதற்றம் காணப்படும் நிலையில், பிரச்சினை நடைபெற்ற தவாங் பகுதி மக்களோ எந்தவித பயமும் இல்லாமல் மிக இயல்பாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பயம் இல்லாததோடு மட்டுமல்லாமல், சீனாவை எதிர்த்து போரிட எங்களுக்கு இந்திய ராணுவம் வாய்ப்பு தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அத்துமீறிய சீனா
அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 17,000 அடி உயரத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவத்தினர் சுமார் 200 பேர் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் வெறும் 50 பேர் சேர்ந்து அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் காயமடைந்ததாகவும், இந்தியத் தரப்பில் 10 வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இந்த அத்துமீறல் ஆசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலில் சூழும் போர் மேகம்
இந்திய ராணுவத்தினரால் சீனப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச ஊடகங்களில் வெளியானதால், சீனாவுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவை பழிதீர்க்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் ஏதேனும் ஒரு பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் சீனா செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதி முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அதே எண்ணிக்கையிலான இந்திய ராணுவ வீரர்கள் அருணாச்சல் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஒரு துளி பயம் இல்லை..
இந்தியா – சீனா இடையே நிலவும் இந்த மோதல் போக்கால் அருணாச்சலப் பிரதேசத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாமல் வடகிழக்கு பிராந்திய மக்கள் மத்தியிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, பிரச்சினையின் மையப்பகுதியான தவாங் பகுதியிலோ நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அங்கிருக்கும் மக்கள் யாரிடமும் துளியளவு அச்சமும், போர் பதற்றமும் காணப்படவில்லை.

“நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?”
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “தவாங்கில் எந்த போர் பதற்றமும் இல்லை. செய்தித்தாள் மூலமாகவே சீன ராணுவத்தினருக்கும், நமது ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அறிந்தோம். சீன ராணுவத்தை கண்டு எங்களுக்கு பயம் இல்லை. எங்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்திய ராணுவம் எங்களுடன் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? பயப்பட வேண்டியது சீனா தான். நாங்கள் இந்தியர் என்பதில் பெருமைப்படுகிறோம். இந்திய அரசாங்கம் எங்களுக்கு அத்தனை உதவிகளை செய்திருக்கிறது. இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சண்டையிட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்” என அவர்கள் கூறினர்.
ஆங்கில சுருக்கம்
“இந்திய ராணுவம் எங்களுடன் உள்ளது. நாம் ஏன் பயப்பட வேண்டும். சீனாவுக்கு தான் பயம்” என அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் மக்கள் தெரிவித்தனர்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: வியாழன், டிசம்பர் 15, 2022, 19:03 [IST]