இனிமேல் நானும் ஒரு லீடர்யா.. லாலன் சிங்கிடம் இருந்து ஜேடியூ தேசிய தலைவர் பதவியை பறித்த நிதிஷ்குமார்!

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) தேசிய தலைவர் பதவியில் இருந்து தாம் ராஜினாமா செய்வதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு லாலன் சிங் கடிதம் அனுப்பி உள்ளார். ஜேடியூ தலைவராக வேண்டும் என்பதற்காகவே லாலன் சிங்கிடம் இப்படி ஒரு கடிதத்தை கட்டாயப்படுத்தி வாங்கி விட்டார் நிதிஷ்குமார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ்குமார்.

நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை தாம் உருவாக்கியதுதான் இந்தியா கூட்டணி; தம்மைத்தான் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் என அறிவிப்பார்கள் என்பது. ஆனால் இந்தியா கூட்டணி மெல்ல மெல்ல காங்கிரஸ் பிடிக்குள் போய்விட்டது. 5 மாநில தேர்தலின் போது இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவும் இல்லை. இதனால் தாம் உருவாக்கிய இந்தியா கூட்டணியையே நிதிஷ்குமார் விமர்சிக்கவும் தொடங்கினார். இதனால் நிதிஷ் குமார் மீது இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன.

இதனைத்தான் டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடந்த 4-வது இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பல கட்சிகளும் வெளிப்படுத்தின. மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் நிதிஷ்குமாரை ஓரம் கட்டும் வகையில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே எனவும் பரிந்துரைத்தனர். அதனை இந்தியா கூட்டணி தலைவர்கள் யாரும் ஏ எதிர்க்கவும் இல்லை. இதனால் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் தமக்கு எதிராக இருப்பதை உணர்ந்து கூட்டத்தை விட்டு பாதியில் வெளியேறி ஓடிப் போனார் நிதிஷ்குமார்.

இதனால் அவரை சமாதானப்படுத்தினார் ராகுல் காந்தி. இன்னொரு பக்கம், ஜேடியூ கட்சிக்குள்ளேயே நிதிஷின் பிடி தளரவும் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஜேடியூ தலைவரான லாலன் சிங், கை ஓங்க தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. பாஜக பக்கம் மீண்டும் தாவுவது என நிதிஷ்குமார் முடிவெடுத்துவிட்டால் ஜேடியூ லாலன் சிங் தலைமையில் இரண்டாக உடையும்; இந்த அணி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் இணையும் அல்லது கூட்டணி அமைக்கும் என்கிற நிலைமை இருப்பதாகவும் கூறப்பட்டது.

சொந்த கட்சியிலும் எதிர்ப்பு… உருவாக்கின கூட்டணியிலும் எதிர்ப்பு என்பதால் விரக்தியடைந்து போயுள்ளார் நிதிஷ்குமார். இந்த பின்னணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை வரும் 29-ந் தேதி நிதிஷ்குமார் கூட்டி இருந்தார். மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் முடிவு செய்திருந்தார் நிதிஷ்குமார். இதற்காகவே லாலன் சிங்கை தற்போது ஜேடியூ தேசியத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார் நிதிஷ்குமார். லாலன் சிங்கும் தமது ராஜினாமா கடிதத்தை நிதிஷ்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். லாலன் சிங்கைத் தொடர்ந்து ஜேடியூவின் தேசிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்க உள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *