இந்தியா Vs சீனா: 60 ஆண்டுகளாகத் தொடரும் எல்லைப் பிரச்னைகளும் சண்டைகளும் | 60 Year long history of Border Disputes between India and China

சர்வதேச

பிபிசி-பிபிசி தமிழ்

மூலம் BBC News தமிழ்

|

புதுப்பிக்கப்பட்டது: வியாழன், டிசம்பர் 15, 2022, 21:56 [IST]

இந்தியா-சீனா எல்லை சண்டை

AFP

இந்தியா-சீனா எல்லை சண்டை

60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரகாசமான இலையுதிர்க்கால அதிகாலையில் சண்டை தொடங்கியது.

அன்று அக்டோபர் 23, 1962. சீனா, பூட்டான் எல்லையை ஒட்டிய வடகிழக்கு இந்தியாவின், வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சி என்றழைக்கப்படும் தொலைதூர இமயமலைப் பகுதியில் சீன வீரர்கள் நுழைந்து தீவிர பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இன்று அது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசமாக அறியப்படுகிறது. அதைத் தனது பிரதேசம் என்று சீனா தொடர்ந்து உரிமை கோருகிறது. மேலும் அங்குதான் கடந்த ஓராண்டில் இரண்டு தரப்புக்கும் இடையில் சமீபத்திய சண்டை ஏற்பட்டது.

“வெடிகள் வானத்தை ஒளிரச் செய்தன. வெடிச்சத்தங்கள் மலைகளுக்கு நடுவே எதிரொலித்தன” என்று இந்திய ராணுவ வீரர்கள் ஸ்வீடிஷ் செய்தியாளரும் ‘சீனாஸ் இந்தியா வார்: கொலிஷன் கோர்ஸ்’ நூலின் ஆசிரியருமான பெர்டில் லிண்டரிடம் கூறினர்.

சீன வீரர்கள் ஓர் இந்திய நிலையை மீறி, 17 இந்திய வீரர்களைக் கொன்றனர், 13 பேரைக் கைப்பற்றினர். ஆச்சர்யம், பொருத்தமற்ற இந்தியப் படைகளிடமிருந்து வந்த சிறிய எதிர்ப்பை எதிர்கொண்டு அவர்கள் முன்னேறினார்கள். அடுத்த நாள், அவர்கள் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புத்த மடாலய நகரமான தவாங்கை கைப்பற்றினார்கள்.

சீனர்கள் தெற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர். நவம்பர் மாதத்தின் மத்திய காலகட்டத்தில், அவர்கள் இந்தியாவின் செழிப்பான தேயிலைத் தோட்டங்கள், எண்ணெய் வயல்கள், சணல் தோட்டங்களின் தாயகமான அசாமிலிருந்து 250கிமீ தொலைவிலுள்ள மலைக்கு அருகிலிருந்த மடாலய நகரமான போம்டிலா நகரத்தை அடைந்தனர்.

பின்னர், நவம்பர் 21 அன்று சீனர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இரண்டு நாடுகளுக்கு இடையிலுள்ள நடைமுறை எல்லைக்கு வடக்கே 20கிமீட்டர் தொலைவுக்கு வெளியேறினார்கள். இது நடைமுறை கட்டுப்பாட்டுக் கோடு என்றழைக்கப்படுகிறது. இது பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வரைபடங்களால் வரையப்பட்டது.

“போர் முடிந்தது. இரண்டு வாரங்களுக்குள் PLA வீரர்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த மலைப்பகுதிக்கு திரும்பினர்” என்று லின்டர் குறிப்பிட்டார். இந்தியா 1,383 வீரர்களை இழந்தது, கிட்டத்தட்ட 1,700 பேர் “சண்டையின்போது காணாமல் போனதாக” கணக்கிட்டனர். சீன பதிவுகளின்படி, இந்தியா தரப்பில் ஏறக்குறைய 4,900 பேர் கொல்லப்பட்டதாகவும் 3,968 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.

இந்திய பாதுகாப்பு ஆய்வாளரும் அண்டர்ஸ்டாண்டிங் தி இந்தியா சீனா பார்டர் என்ற புதிய நூலின் ஆசிரியருமான மனோஜ் ஜோஷி, சீனர்கள் ஏன் பின்வாங்கினார்கள் எனபது தெளிவாகவில்லை எனக் கூறினார்.

இந்தியா-சீனா எல்லை சண்டை

கெட்டி படங்கள்

இந்தியா-சீனா எல்லை சண்டை

“அவர்களுடைய சப்ளை லைன்கள் தாமதமானதால் ஏற்பட்டதா? அவர்கள் தலையீட்டிற்கு அவர்கள் அஞ்சினார்களா? அல்லது அவர்களுடைய கிழக்கு(எல்லை) உரிமைகோரல்கள் குறித்து அவர்கள் உண்மையில் பெரிதாக அக்கறை காட்டவில்லையா?” என்கிறார்.

சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, லடாக்கை சுற்றியுள்ள மேற்குப் பகுதி, திபெத்துடன் இந்தியாவின் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு இடையிலான எல்லையை உள்ளடக்கிய பகுதி, அருணாச்சல பிரதேச எல்லையைக் கொண்டுள்ள கிழக்குப் பகுதி.

இது உண்மையில் ஒரு “கற்பனைக் கோடு” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது 3,488 கிமீ நீளம் என்று இந்தியர்கள் கூறுகிறார்கள். 2,000 கிமீட்டருக்கு சற்று அதிகமாக இருப்பதாக சீனர்கள் கூறுகிறார்கள்.

எல்லையின் மேற்குப் பகுதியில் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுவிட்சர்லாந்தின் அளவிலான ஆக்சாய் சின் பீடபூமிக்கு இந்தியா உரிமை கோருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது.

இந்தியாவின் கூற்றுப்படி அருணாச்சல பிரதேசத்தின் 1,126கிமீ நீளமுள்ள கிழக்கு எல்லை, சீனாவால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாதது. அது மேக்மஹோன் கோடு மூலம் உருவாக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு செயலராக இருந்த ஹென்றி மெக்மஹோன் என்ற ஆங்கிலேயரின் நினைவாக இது அழைக்கப்படுகிறது.

ஆசியாவின் இரண்டு பெரிய, அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளும், உலகில் நிலவும் மிக நீண்ட கால எல்லைப் பிரச்னைகளில் ஒன்றை நிறுத்துவதற்கு ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளன. இரு தரப்பினரும் பெரும்பாலும் அமைதியைக் கடைபிடித்துள்ளனர். ஆனால், அத்துமீறல்கள், ஊடுருவல்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதும் வழக்கமாக உள்ளது.

இந்தியா-சீனா எல்லை சண்டை

AFP

இந்தியா-சீனா எல்லை சண்டை

ஆனால், சீனா அருணாச்சல பிரதேசம் மீதான தனது உரிமைகோரலை கைவிடவில்லை. இன்னும் பெரும்பாலான பகுதிகளை “தெற்கு திபெத்” எனவும் குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு சீன சிவில் விவகார அமைச்சகம் சர்ச்சைக்குரிய பகுதியில் பல இடங்களின் பெயரை மறுபெயரிட்டது. சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் “வரலாற்று மற்றும் நிர்வாக அடிப்படையில்” இருப்பதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

1950களில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கனிம வளம் நிறைந்த, மூலோபாய ரீதியாக அமைந்திருக்கும் பனிப் பாலைவனமான ஆக்சாய் சின் மீது சினாவின் இறையாண்மையை இந்தியா ஏற்றுக்கொள்வதற்காக, அருணாச்சல பிரதேசத்தின் மீதான இந்திய இறையாண்மையை சீனா ஏற்றுக்கொள்வது என்ற பார்வையில், இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தத்தில் அருணாச்சல பிரதேசம் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக சீனா கருதுகிறது.

ஆனால், பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செரிங் டாப்கியால் போன்ற வல்லுநர்கள் இது இனி அப்படியிருக்காது என்று நம்புகிறார்கள்.

“திபெத்தின் மீதான சீன கட்டுப்பாட்டின் நம்பிக்கைக்கும் அருணாச்சல பிரதேசம் மற்றும் ஆக்சாய் சின் இடையே பரிமாற்றத்திற்கான முறையீட்டிற்கும் இடையே தொடர்பு இருக்கலாம். இப்போது, எல்லைப் பிரச்னையை சீனா அணுகுவது பிராந்திய ஆதாயம் அல்லது உள்ளூர் இழப்பு போன்றவற்றின் அடிப்படையில் இல்லை. பரந்த தேசிய மற்றும் வெளியுறவுக் கொள்கை நலன்களை மனதில் கொண்டு தான் பெரும்பாலும் அணுகுகிறது,” என்று டாக்டர் டாப்ஜியால் என்னிடம் கூறினார்.

முன்னதாக டெல்லியிலிருந்து நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட அருணாச்சல பிரதேசம் 1987இல் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இது சினாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை பலப்படுத்தியது. அதற்கு அருகில் கிராமங்களை உருவாக்கி வருகிறது.

அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியத் தலைவர்களின் வருகை சீனாவை எரிச்சலூட்டியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2008ஆம் ஆண்டு அந்த மாநிலத்திற்குச் சென்று சாலை அமைக்கும் திட்டப் பணிகளை அறிவித்தபோது சீனா முறையாக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மாநிலத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனளிப்பதை எதிர்த்துள்ளது, இந்திய ராணுவ அதிகாரிகளுக்கும் அப்பகுதியிலுள்ள அதிகாரிகளுக்கும் விசா மறுத்துள்ளது.

2014இல் பிரதமர் நரேந்திர மோதி, அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூர, புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த 2,000கிமீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

“உறவுகளைச் சீர்குலைக்க நாங்கள் எதையும் செய்யவில்லை. இது சீனாவுடன் சவால் அல்லது போட்டியின் அடிப்படையில் இல்லை, எங்கள் சொந்த நிலப்பரப்பைப் பாதுகாப்பதன் அடிப்படையிலானது,” என்று மாநிலத்திலிருந்து வரும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்.

சீனாவின் பார்வையில், “இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருப்பது, அருணாச்சல பிரதேசத்தின் மீதான உரிமை உட்பட, இந்தியாவின் லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அமெரிக்காவுடனான வளார்ந்து வரும் உறவுகளைப் போன்ற அதன் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்குமான மூலோபாய விஷயமாக இருக்கலாம்,” என்கிறார் டாக்டர் செரிங்.

“அனைத்து அண்டை நாடுகளுடன் சீனா கொண்டிருந்த அனைத்து எல்லைப் பிரச்னைகளிலும் இந்தியா-சீனா தகராறு மட்டும் ஏன் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது?” என்று கேட்கிறார் அவர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, சமீபத்திய சண்டை நடந்த யாங்ட்சே, மக்கள்தொகை குறைவாக உள்ள இடம். இது சீனப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து 5கிமீ தொலைவிலுள்ளது. இரண்டு தரப்பிலிருந்தும் ஒன்றுடன் ஒன்று உரிமைகோரல்களைக் கொண்ட சர்ச்சைக்குரிய எல்லையிலுள்ள பல்வேறு பகுதிகளில் இதுவும் ஒன்று.

“கிழக்கு எல்லை மீண்டும் சூடுபிடிப்பதைப் போல் தெரிகிறது. உண்மையில், இதில் ஆச்சர்யமில்லை,” என்கிறார் ஜோஷி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பிபிசி தமிழ்

ஆங்கில சுருக்கம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 60 ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்தியா Vs சீனா சமீபத்திய செய்திகள் தமிழில்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *