“இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ளதான் ஸ்டாலின் டெல்லி சென்றார்!” – எடப்பாடி பழனிசாமி தாக்கு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளம், தோவாளை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களை நேற்று மாலை முதல் இரவு வரை பார்வையிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டேன். நான் பார்த்த அளவில் மீட்புப் பணிகள் மிக மிக தொய்வாக இருக்கின்றன. இனிமேல்தான் மீட்புப்பணியை தொடங்குவார்களா என தெரியவில்லை. நான் பார்த்த அளவில் இதுவரை மீட்புபணிகளை தொடங்கவில்லை.

தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை என மக்கள் தெரிவித்தார்கள். மூன்று நாள்கள் குடிதண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல், பால் இல்லாமல் குழந்தைகள் கஷ்டப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தார்கள். அந்த முன்னேற்பாடுகளைகூட இந்த அரசு செய்துகொடுக்கவில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என 14.12.2023 அன்றே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது. அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது, ஊடகங்களிலும் தகவல் வெளிவந்துவிட்டது. அப்போதாவது இந்த அரசு வேகமாக, துரிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். உணவுக்கும், குடிநீருக்கும் மக்கள் இவ்வளவு தடுமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். அதை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. முதல்வர் டெல்லியில் பிரதமரை பார்க்க போகவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்டு, அதோடு பிரதமரை பார்க்க சென்றுள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் வந்தபோது 3.12.2023 அன்று மாலையே மழை பெய்ய தொடங்கிவிட்டது. மறுநாள் 4-ம் தேதி மதியம் ஒரு மணி வரை மழைபெய்தது. தண்ணீர் வடியவில்லை, எந்த அதிகாரிகளும் போய் பார்க்கவில்லை. 4-ம் தேதி இரவுதான் தலைமைச் செயலாளர், ஊடகங்களிடம் ‘என்.எல்.சி நிறுவனத்தில் இருந்து ராட்சஷ மின் மோட்டார் வரவழைக்கப்பட்டு தண்ணீர் அகற்றப்படும்’ என பேட்டி கொடுக்கிறார். எந்த பகுதியையும் அதிகாரிகள் போய் பார்க்கவில்லை, ஆய்வுபணிகள் செய்யவில்லை, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை. அங்கும் தண்ணீர், உணவு இல்லை, குழந்தைகளுக்கு பால் இல்லை என புகார்கள் வந்தன.

மக்களுக்கு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிச்சாமி

ஆனால், 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு தமிழகத்துக்கு ஆறாயிரத்து 730 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். யாரும் ஆய்வுப்பணி மேற்கொள்ளாத நிலையில், சேத விபரங்கள் சேகரிக்கப்படாத நிலையில் எந்த அடிப்படையில் கோரிக்கை வைக்கிறார். எந்தெந்த துறையில் எவ்வளவு சேதம் என முறையாக கணக்கிட்டு, மத்திய அரசுக்கு வழங்கினால்தான் நிதி பெற முடியும். அதை எல்லாம் விட்டுவிட்டு விளம்பரத்துக்காக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். முறையாக நிதியை மத்திய அரசிடம் பெறவேண்டும் என்றால், மழை பெய்து முடிந்து, எந்தெந்த துறையில் எவ்வளவு சேதாரம் என கணக்கிட்டு, அதை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தால் நிதி கிடைக்கும். அதைவிட்டுவிட்டு விளம்பரத்துக்காக நாடாளுமன்றத்தில் பேசினார்களே தவிர மக்களுக்காக அல்ல” என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *