இங்கிலாந்து அணியுடன் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா சாதனை வெற்றி.! மூன்றே நாளில் முடிந்தது

நவி மும்பை: இங்கிலாந்து மகளிர் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 347 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று சாதனை படைத்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதை தொடர்ந்து இரு அணிகளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் கடந்த 14ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 428 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வெறும் 136 ரன்னுக்கு சுருண்டது.

இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 292 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் 44, தீப்தி சர்மா 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 4, சோபி எக்லஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினர்.3வது நாளான நேற்று 479 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

அந்த அணி 27.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 21 ரன், சார்லி டீன் 20* ரன், பியூமான்ட் 17, கிராஸ் 16, சோபியா 15வியாட் 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 347 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை வசப்படுத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. தீப்தி சர்மா 4, பூஜா வஸ்த்ராகர் 3, ராஜேஸ்வரி 2, ரேணுகா சிங் ஒரு விக்கெட் எடுத்தனர். 2 இன்னிங்சிலும் சேர்த்து 87 ரன் (67 & 20) மற்றும் 9 விக்கெட் (5 & 4) எடுத்த தீப்தி சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *