ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கருக்கா வினோத் – அண்ணாமலை ரியாக்ஷன்

பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை கிண்டியில் ராஜ்பவன் ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் வீசிய பெட்ரோல் குண்டு வெடித்ததில் அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும், ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பாதுகாப்பு ஈடுபட்ட காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.

ரவுடி கருக்கா வினோத் செயல்

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை கைது செய்துள்ள கிண்டி போலீஸார், எதற்காக ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டை வீசினார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி

கருக்கா வினோத் என்பவர் ஏற்கெனவே, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை தமிழகம் வரும் நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கடும் விமர்சனம்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை வெட்ட வெளிச்சமாக காட்டுவதாக தெரிவித்துள்ள அவர், திமுக அரசு வழக்கம்போல இதனையும் திசை திருப்பும் என கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ஆளுநர் மாளிகை முன்பு குண்டுவீசப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *