ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஊதியத்தை உயர்த்தி அறிவித்தது தமிழ்நாடு அரசு

TN Teachers Salary Hike: ‘சமவேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் 10 ஆண்டுகளாக ஆசிரியர்ப் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் என மூன்று பிரிவாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக வளாகத்தில் இரவும் பகலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுடன் கடுமையாக போராடியவர்களுடன் அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசியர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அதில் அவர்,”நிதி நிலைமை சரியில்லாத சூழலிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கும் சேர்த்து இன்றைக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறோம்.

ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து

இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்று வந்தாலும், இடையிடையே என்னை அழைத்து என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள், நமது விளக்கத்திற்கு அவர்கள் கருத்து என்ன என்பது பற்றியெல்லாம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார் முதலமைச்சர்.

அதன் ஒருபகுதியாகத்தான் இன்றைக்கு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறோம். என்னதான் நிதி நெருக்கடி, கூடுதல் செலவினம் என்று சொன்னாலும் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

10 ஆண்டுகள் ஆட்சியில்…

ஆசிரியர்கள் உங்களை வருத்திக்கொண்டு, அந்த மன உளைச்சலை முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறைக்கும் வழங்காமல், நீங்கள் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். உங்கள் தேவைகளை பார்த்துப் பார்த்துச் செய்ய நம் முதலமைச்சர் இருக்கிறார். உங்களை வருத்திக்கொள்ளும் வகையிலான இந்தப் போராட்டங்களை இத்துடன் முடித்துக்கொண்டு மாணவர்களுக்கு பாடம் புகட்டும் பணி, எண்ணும் எழுத்தும் பயிற்சிப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஒருகாலத்தில் ஆசிரியர்கள் போராடும் போதெல்லாம் அவர்களை அழைத்துக் கூட பேசாத நிலை இருந்தது. இன்று யார் யாரோ போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது, எங்கள் ஆசிரியப் பெருமக்கள் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். 10 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சியில் இருந்தீர்கள், என்ன செய்தீர்கள் எனக் கேட்டிருந்திருக்கலாம். பரவாயில்லை. இந்த நேரத்தில் ஆசிரியர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முதல்வர் ஆசைப்படுகிறார்.

முக்கிய அறிவிப்புகள்

சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.

அதேபோல பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும்.  தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்போருக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 58 ஆகவும் உயர்த்தப்படும்” என அறிவித்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *