அமர்பிரசாத் ரெட்டி கைது எதிரொலி… உடனே ஜே.பி. நட்டா அமைத்த குழு – பின்னணி என்ன?

Tamil Nadu Latest: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை மதுரை மாநகர் போலீசார் தூத்துக்குடியில் இன்று (அக். 22) கைது செய்தனர்.

அவதூறு

தூத்துக்குடி மாவட்டம் புது கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி. பாஜகவின் பிரமுகரான ஜான் ரவி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறையில் ஜான் ரவி மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், மதுரை சைபர் கிரைம் போலீசார் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று ஜான் ரவி தூத்துக்குடியில் தனது வீட்டில் இருக்கும்போது மதுரை மாநகர போலீசார் வந்து தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் ஜான் ரவியை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

குழுவில் இருப்பது யார் யார்?

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் பாஜகவினருக்கு ஆளும் திமுக அரசால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார்.

அந்த குழுவில் முன்னாள் கர்நாடக முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா; நாடாளுமன்ற உறுப்பினரும், மும்பையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளருமான சத்ய பால் சிங்; ஆந்திரா பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி; நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன் உள்ளிட்டோர் அடக்கம். இந்த குழு சார்ந்த செய்திகுறிப்பை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் வரும் நால்வர் குழு

அந்த செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசால் பாஜக தொண்டர்கள் சந்திக்கும் மிருகத்தனமான மற்றும் கண்மூடித்தனமான நடத்தைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடுக்கு நால்வர் குழு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த குழு அதன் அறிக்கையை விரைவில் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர் பிரசாத் ரெட்டி கைது

இதில் முக்கியமான ஒன்று நேற்று பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி கைதானது. தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது சொத்தை சேதபடுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டில் பாஜக கொடி கம்பம் அமைக்கும் போது இஸ்லாமியர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி அனுமதி இன்றி நடப்பட்ட பாஜக கொடி கம்பத்தை அகற்ற மேற்ப்பட்ட போது ஜேசிபி இயந்திரங்கள் கண்ணாடிகளை பாஜகவினர் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *